வியாழன், 3 டிசம்பர், 2015

நொருக்கு தீனிகளால் ஊட்டச்சத்து குறைபாடு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்.

நொருக்கு தீனிகளால் ஊட்டச்சத்து குறைபாடு   நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்.

பந்தலூர் , டிச. 5: பந்தலூரில் டியூஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் மைய ஆலோசகர் காளிமுத்து, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், சாலோம் அறக்கட்டளை இயக்குனர் விஜயன் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், நீலகிரி மின் நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாக உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் தற்போது நொருக்கு தீனி பழக்கம் அதிகரித்துள்ளது.  இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகின்றது.  ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகின்றது.  இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் இதர திறன் மேம்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமலும் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து பாணங்கள் மூலம் உடலுக்கு தேயைான சத்துக்கள் கிடைக்காது நாம் உண்னும் உணவே உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. தேவையற்ற செலவினங்களை அதிகமாக செலவிடுவதால் மக்களிடையே சேமிப்பு பழக்கம் குறைவாக உள்ளது, இதனால் அவசர தேவைக்கு கடன் வாங்கி பலரும் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே மாணவர்கள் ஊட்டச்த்து மிக்க இயற்கை உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.  தேவையற்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்,  சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்றார். மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஆசிரியர்  சத்தியவதி  வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் சேகர் நன்றி கூறினார். 

வியாழன், 26 நவம்பர், 2015

மின்சாரம் சிக்கனம் செய்வதற்கான சில வழிமுறைகள்...

இதோ உங்களுக்காக மின்சாரம் சிக்கனம் செய்வதற்கான சில வழிமுறைகள்...

1. தற்சமயம் குண்டு பல்புக்கு பதில் டியூப் லைட் பயன்படுத்துகிறோம் இதில் எலக்ட்ரானிக் சோக்குகள் உள்ள டியூப்லைட் பயன்படுத்தினால் மின்சாரம் சேமிக்கலாம்.


2. டியூப்லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் (கம்பேக்ட் ஃப்ளோரெஸன்ட் லேம்ப்) வந்துவிட்டது. இவைகள் மின்சார நுகர்வு குறைவானதாகவும் அதிக வெளிச்சம் தரக்கூடியதும் ஆகும். 

எதிர்காலத்தில் எல்.ஈடி (லைட் எமிட்டிங் டயோட்) வகை பல்புகள் மிகமிக குறைந்த மின் நுகர்வையும் அதிக ஒளியையும் தருவதால் அதிகமான அளவில் பயன்பாட்டுக்கு வரும் என்பது நிச்சயம். 

ஏனெனில் 60 வாட் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை 15 வாட் எல்ஈடி பல்பு தருவதால் எவ்வளவு மின்சாரத்தை மிச்சபடுத்தலாம்.
 
3. எந்த மின்சாதனம் வாங்கும்போதும் தரமானதாகவும், நீடித்து உழைக்குமாறும், (BEE பிஈஈ )  தரச்சான்று பெற்ற தயாரிப்புகள் வாங்கும்போது நமக்கு பாதுகாப்பு மற்றும் சரியான மின் நுகர்வு ஆகியவை கிடைக்கும்.

4. ஆர்க் விளக்குகள், நியான் விளக்குகள், சோடியம் ஆவி விளக்குகள், பாதரச விளக்குகள் போன்றவை மிக அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் 

ஆகையால் இவ்வகை விளக்குகளை மிக அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5. எக்ஸாஸ்ட் பேன் வீண் செலவு என்று கருதாமல் அது உடல்நலத்திற்கு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இதனை பயன்படுத்தலாம். 

அதே சமயம் தேவையில்லாமல் இயங்குவதை கவனித்து கொள்ள வேண்டும். 

சில நேரங்களில் ஜன்னல்கள் திறந்து வைத்தாலே அறையிலுள்ள புகை வெளியேறி வெப்பசமநிலை உருவாகும்.

6. வீட்டு அறைகளின் மேல்தளம் மொட்டை மாடியாக இருந்தாலும், ஒரு பக்க சுவர் வெயில் படும்படி இருந்தாலும் இரவில் பேன் பயன்படுத்தும்போது சுவற்றிலிருந்து வெப்பம் வெளியாகி வெப்பகாற்று வீசும்.

இதற்குதான் பலர் சீலிங் மற்றும் ஸ்டேன்டிங் பேன் என இரண்டு பேன்களை பயன்படுத்துவார்கள். 

இதனை தவிர்க்க மொட்டை மாடியில் வெயில் தடுப்பு போட்டால் வெயில் தாக்கம் குறைந்து ஒரே பேனில் குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.

7. கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலும், அழுக்கு காரணமாக டைட்டாக இருந்தாலும் அதிக நேரம் ஓட்ட வேண்டிய நிலை உருவாகும் அதனால் மின்செலவு அதிகரிக்கும்.

 எனவே குறிப்பிட்டகாலத்திற்கு ஒரு முறை பெல்ட் மாற்றிவிடுவது நல்லது. 

பலர் கிரைண்டர் ஸ்விட்ச்சை மட்டும் நிறுத்திவிட்டு பிளக்பாயின்ட் ஸ்விட்சை நிறுத்தாமல் விடுவார்கள் 

இது தவறு 

எந்த மின்சாதனத்தையும் ரிமோட் மூலம் மட்டும் நிறுத்தாமல் பிளக்பாயின்ட் ஸ்விட்சை நிறுத்தினால் மட்டுமே 

மின்நுகர்வு முழுமையாக நிறுத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

8. பெருமளவு வெந்நீர் தேவைப்படும் விடுதிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் மொட்டைமாடியில் சூரியசக்தி(சோலர்) வெப்பசாதனத்தை பயன்படுத்துவது பெருமளவு மின் சேமிக்கலாம்.

9. ஏசி அறைகளில் மேலே தெர்மாகோல் கூரை, சுவற்றில் வெப்பம் கடத்தா பெயின்ட் பூச்சி மற்றும் தரைவிரிப்புகள் பயன்படுத்தினால் அதிக நேரம் குளிர்ச்சியை தாங்கி நிற்கும் 

அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்டகால இடைவெளியில் குளிர்சாதன பெட்டியை சர்வீஸ் செய்வதால் மின் நுகர்வு குறையும்.

10 பிரிட்ஜ் அடிக்கடி அணைத்து வைக்க வேண்டியதில்லை. 

ஏனெனில் தேவையான குளிர்ச்சியடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். 

ஆனால் அடிக்கடி திறந்து மூடினாலும் தேவையான கொள்ளளவை விட பெரியஃபிரிட்ஜ்கள் ஆகியன மின் செலவை அதிகமாக்கும் 

பிரிட்ஜ் மீது நேரடியாக சூரியஓளி படாமலும், ஃபிரிட்ஜ் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறும் வைப்பதால் மின்நுகர்வு குறையும்.

11. வாஷிங் மெஷின் டிரை யரை வெயில் நாட்களில் தவிர்க்க வேண்டும். 

இது துவைப்பதற்கு பயன்படும் மின்சாரத்தின் அளவே டிரையருக்கும் தேவைப்படுகிறது இது இரண்டு முறை துவைப்பதற்கு ஆகும் மின்செலவுக்கு சமம். 

அதே போல் தொலைக்காட்சி பெட்டி வாங்கும்போது வீட்டிற்கு தேவையான அளவுள்ள டிவியைமட்டுமே தேர்ந்தெடுத்தல் நல்லது 

ஏனெனில் பெரிய அளவு டிவிக்கள்அதிக மின்நுகர்வு எடுத்துக்கொள்ளும்.

12. மின்சாரத்தை விட பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தி மின்செலவை மிச்சபடுத்தலாம் என்பது தவறு. 

ஏனெனில் அந்தசாதனங்களை பராமரிப்பது அதிக செலவை உண்டாக்கிவிடும். 

வீட்டின் ஜன்னல்களுக்கு திரையிட்டு மூடாமல் இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்தி கொள்வது மிகமுக்கியமானதாகும். 

இதனை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

13. பொதுவாக அயர்ன் செய்யும்போது பேன் போட வேண்டாம். உயரம் குறைவான இறக்கை கொண்ட பேன்களை பயன்படுத்தலாம், 

ஸ்விட்ச்போர்டு இன்டிகேட்டர் லைட்டால் மின்செலவு ஏற்படாது, 

குளிர்சாதனத்தை 18 டிகிரியில் இயக்குவதைவிட 22 டிகிரியில் இயக்கினால் மின்செலவு குறைவாகும்.

அதே போல் வெளியூர்களுக்கு செல்லும் நேரத்தில் மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு சென்றால் மிகவும் நல்லது. 

நமது நாட்டை பொருத்தவரையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை என்பது தான் உண்மை. 

தற்போது மின்வெட்டால் தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைவு மற்றும் வேலை வாய்ப்பு குறைவு ஆகிய பிரச்சனைகள் பூதாகரமாக உருவாகி வருகிறது. 

இத்தகைய சவால்களை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் தான் வீட்டிற்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

இதோ சில யோசனைகள் ,

இன்னைக்கு நமக்கு பெரிய பிரச்சினை மின் தட்டுப்பாடு. அரசினை இதற்க்கு குறைகூறும் போக்கை கைவிட்டு மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகளைக் கையாண்ட்டால் நல்லது. எதோ நம்மாலான சின்ன உதவியை இந்த நாட்டுக்கு செய்வதாக அமையும். 

வீட்டில் மின் சேமிப்பை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது கிச்சனில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. 

இதோ சில யோசனைகள் , 

இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சொல்லவில்லை, பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

குளிர்சாதனப்பெட்டி:Refrigerator:

ஒரு வீட்டில் வருடதிற்க்கு குளிர்சாதன உபயொக்கதால் 600-1200 கிலோவாட்-ஹவர் (kWh) மின்சாரம் உபயோகமாகிறது. இதில் மின் உபயோகத்தக் குறைக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.

· உங்கள் குளிர்சாதனதின் வெப்பதினைஅ 37-40 F அளவில் இருக்குமாறு வைக்கவும்.

· அதிகமான பொருட்களை பெட்டியினுள் திணிக்க வேண்டாம், இதனால் உள்ளே காற்றோட்டம் சரியாக இருக்காது. சில நேரம் கதவினைச் சரியாக மூட இயலாமல் போய் மின்சாரம் வீணாகும்.

· குளிர்சாதனப் பெட்டியின் கதவில் காற்று புகாமல் இருக்க உபயோகிக்கபடும் கேஸ்கட்(gaskets) சரியாக இருக்கிறதா என்பதை மாதமொருமுறை சரிபார்க்கவும். அதன் திறனை இழந்து விட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.

· திரவ உணவுகளை உள்ளே வைக்கும் போது மூடி போட்டு வைக்கவும், இல்லையெனில் அவை ஆவியாகி கம்ப்ரஸரின் வேலையை அதிகமாக்கி விடும்.

· சூடான உணவும் போருட்களை உள்ளே வைக்க கூடாது. ஆறவைத்த பின்னர்தான் உள்ளே வைக்க வேண்டும்.

· சமைக்கும் போது பக்கதுலதான் இருக்குனு கரிவேப்பிலைக்கு ஒரு முறை, கொத்தமல்லி இலை எடுக்க ஒருமுறை என திறந்து திறந்து மூட வேண்டாம், நால்ல யோசிச்சி இன்னிக்கு சமைக்கப் போறதுக்கு இதேல்லாம் வேணும்னு முடிவு செய்து ஒரே முறை திறந்து தேவையானவற்றை எடுதுவிட்டு மூடிவிட வேண்டும்.

· மின்ச்சாரதைச் சேமிக்க பவர் சேவர் சுவிட்ச் உங்களது குளிச்சாதனப் பெட்டியில் இருந்தால் அதை உபயோகப் படுத்தவும்.

· வீட்டில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் குளிர்ச்சதனப் பெட்டியை வைக்க கூடாது.

குளிர்சாதனம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

· மின் உபயோகதினை 40% குறைக்க ஒருவழி வரும் தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆபரில் பழைய குளிர்சாதனத்தைக் கடாசிவிட்டு புதுசுக்கு மாறிடுங்க.

· 165 லிட்டடர் வேனுமா, இல்லை 200 லி, சிங்கிள் டோர், டபுள் டோர், எதுவானாலும் உங்கள் தேவையக்கு சரியான அளவில் வாங்க வேண்டும். சிறிதாக வாங்கி விட்டு, உள்ளே பொருட்களைத் திணிக்க வேண்டாம்.

· மின்சேமிப்பு முறைகள் உள்ளதாவும், எனர்ஜி ஸ்டார் உள்ளதாகவும் பார்த்து வாங்குங்கள்

மின்சாரத்தை சேமிப்பது எப்படி?


1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி.

2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.

3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.

4) அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும்.

5) வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில்மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம்.

6) சாதாரண குமிழி விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சிறுகுழல் விளக்குகளைப் பயன்படுத்தவும்.

7) சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும்.

குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக்சோக்குகளை உபயோகிக்கவும்.

9) பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம்செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய 5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும்.

10) அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள், நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை
முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின்மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவைமின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்கு பெரிதும்உதவுகின்றன.

11) தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம்செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம்.


மின்விசிறி:

1) குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும்.

2) மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைஉபயோகிக்கப்பதால் மின்செலவு குறைகிறது.

3) மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்.

4) மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.

5) மின்விசிறியிலுள்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும்.

கிரைண்டர்:

1) மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும்.

2) கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும் உபயோகிக்கவும்.

3) கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

4) கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில்அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும்.

வாஷிங் மெஷின்:

1) வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

2) வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும்.

குளிர்சாதனக் கருவி:

1) அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியைதேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.

2) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை கூடிய வரையில் திறந்தவுடன் மூடிவிட வேண்டும்.

3) குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

4) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம்அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

5) மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரி சென்டிகிரேடு அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன்
தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும்.

6) பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்தஎரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்ட குளிர்சாதனக் கருவியை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
அயன் பாக்ஸ்

1) தினமும் ஒன்றிரண்டு துணிகளை “அயர்ன்” செய்வதை தவிர்த்து, ஒரே நேரத்தில் மொத்த துணிகளை “அயர்ன்” செய்யவும்.

குளிர்பதனப் பெட்டி:

1) குளிர்பதனப் பெட்டியினை, சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும்.

2) குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடிதிறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3) சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப்பொருட்களை அறையின் வெப்ப நிலைக்கு கொண்டு வந்து, அவற்றை நன்கு மூடி குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும்.

4) குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும் உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.

5) மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கிபயன்படுத்துதல் வேண்டும்.

6) குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்குஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும்.
நீர் ஏற்றும் பம்பு


1) மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும்.

2) சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும்.

3) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

4) நீர் ஏற்றும் பம்பு செட் மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும்.

5) தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை தெரிவிக்கும்/கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும்.

நீர் சூடேற்றி (ஹீட்டர்):

1) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

2) தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்கு பதிலாக சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும்.

3) வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்பபாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும்.

கணினி:

1) பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். மாறாக 24 மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினைவீணடிக்கிறது.

2) கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை செலவழிக்கிறது.

3) தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர் மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன.

4) திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன. அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்கு உதவுவதோடு கணினிகளுக்கு நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.
மின் சேமிப்பு வீட்டிற்கும் நாட்டிற்கும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.

இந்திய சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது

உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய சட்ட தின விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தா ஜோசப் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

சட்ட தினத்தின் அவசியம் குறித்து வில்லிசை பாட்டு மாணவ மாணவியர்களால் நடத்தப்பட்டது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கியதன் அவசியம் மற்றும் சட்ட மேதை அம்பேத்கார்  அவர்களின் சிறப்புகள் குறித்து மாணவியர் பேசினார்கள்

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் பழனிசாமி  பேசும்போது சட்டத்தின் மூலமே அரசு நடைபெறுகின்றது.  மாணவ பருவத்திலேயே சட்டத்தினை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்படுத்த படுகின்றது.  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், கல்வி பெறும் உரிமை சட்டம், பெண்களுக்கான சட்டங்கள் என பல்வேறு சட்டங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசும்போது சட்ட கல்வி அனைவருக்கும் தேவையானது.  அனைவரும் சட்டம் கற்றுக்கொள்ளும் வகையில் சட்ட கல்வி பள்ளி கல்விகளில் சேர்க்க வேண்டும்.  நீதிமன்றங்களில்  தமிழ் மொழியை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.   என்றார்.

மக்கள் சட்ட மைய இயக்குனர் வக்கீல் விஜயன் பேசும்போது அனைவருக்கும் நிற்க, நடக்க, பேச, கருத்து கூற, எழுத உரிமைகள் அரசியல் அமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது.  அவற்றை பாதுகாக்க வேண்டிய உரிமையும், கடமையும் அரசிற்கும், மக்களுக்கும் உண்டு என்றார்.

கூட்டத்தில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் ஆகியோர் பேசினார்கள்.  நிகழ்ச்சியில் சட்டதின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை குணசீலி, ஆசிரியை மாதேலன் ஆகியோர் செய்திருந்தனர்.  முன்னதாக  மாணவி நான்சி கிருஸ்டினா வரவேற்று பேசினார்.  முடிவில் மாணவி அனுசா செர்லின் நன்றி கூறினார்.

ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம்

ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் வைத்து நமது வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் நமக்கென்ன பலன் என்று நினைக்கலாம். நிச்சயமாக உள்ளது. உங்கள் வீட்டு மின் கட்டணம் குறைவாக வரும், மேலும், உங்கள் வருங்காலத்துக்கு மின் தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
இதற்கு வீட்டில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
வீட்டில் தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின் விளக்குகளை, மின் விசிறிகளை அவ்வப்போது அணைத்து விட வேண்டும்.
வெளிச்சமான அறைகள் உள்ள வீடுகளை கட்ட வேண்டும். வாடகைக்கு குடிபோகும் போது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும்படியான வீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகள் போடுவதை தவிர்க்கலாம்.
சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் போது அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்.
மஞ்சள் நிற பல்புகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து, டியூப் லைட் மற்றும் தற்போது வந்துள்ள சிறு குழல் விளக்குகளை பயன்படுத்துவதால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
டியூப் லைட்டுகளில் பழைய சோக்குகளை மாற்றி விட்டு தற்போது வந்துள்ள எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தலாம். இதனால், டியூப் லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் தாமதம் மற்றும் அதனால் வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
குறைந்த எடையுள்ள மின் விசிறிகளாகப் பார்த்து வாங்கவும்.
மின் விசிறிகளையும், டியூப் லைட்டுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தலாம். வெயில் அடிக்கும் நாட்களில் வெளியில் துணிகளைக் காயப்போடுவதே சிறந்தது.
வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் போது தண்ணீரை சூடு படுத்தி உடனே பயன்படுத்துங்கள். தேவையான அளவுக்கு சூடு ஆனதும் உடனே ஆப் செய்து விடுங்கள்.
இன்டெக்சன் ஸ்டவ்களை பயன்படுத்தும் போது அடிப்பாகம் அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இதனால் மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் அமர்ந்து டிவி பார்ப்பதை விட, கூடுமானவரை அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து டிவி பார்ப்பது சிறந்தது. இது பல வீடுகளில் ஒத்துவராது என்றாலும், முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.
இடம் இருந்தால் காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் அமர்ந்து சில மணி நேரங்கள் பொழுது போக்குவது, உடலுக்கும், மின்சாரத்துக்கும் சிறந்த வழியாகும்.
தூங்க செல்லும் முன்பும், வீட்டை விட்டு கிளம்பும் முன்பும், அனைத்து மின் சாதனங்களும் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பிரிட்ஜ்களில் அதிகமான பொருட்களை வைத்து பராமரியுங்கள்.  பிரிட்ஜ்களில்  அதிகமான பொருட்கள் இருப்பது, அது குளிர் தன்மையை நீண்ட நேரம் பாதுகாத்து வைத்து மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்த உதவுகிறது.

வெள்ளி, 13 நவம்பர், 2015

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பயன்படுத்தும் முக்கியமான சொற்கள்:
1.Consideration = பொருள் அல்லது சேவைக்காக வழங்கப்படும் விலை
2.Defect = பொருளில் உள்ள குறைபாடு
3.Deficiency = சேவையில் ஏற்படும் குறைபாடு
4.Service = சேவை
5.Restriction trade practice = கட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயல்
6.Unfair trade practice = நேர்மையற்ற வியாபார செயல்
1. நுகர்வோர் என்பவர் யார்? அவருடைய உரிமை என்ன?
தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் இதனை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர் அல்லது மறுவிற்பனை செய்பவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.
நுகர்வோரின் உரிமைகள் பின்வருமாறு:
1.குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை
2.கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.
3.தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.
4.குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.
5.இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.
6.தம்முடைய நுகர்வோர் உரிமையை சுதந்திரமாக செயல்படுத்துவதற்காக நுகர்வோர் கல்வி பெறுதவதற்கான உரிமை.
2. பொருட்களை கொள்முதல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை யாவை?
கொள்முதல் செய்யும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும். மேலோட்டமாக பார்த்த உடனேயே தெரிகின்ற குறையேதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி கொள்க. பொருளுடன் வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. ISI, Agmark போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்க.
3. நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?
இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூற வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையை திருப்பி வழங்கிவிடுவார்.
4. நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அனுக வேண்டும்?
விற்பனையாளரிடம்/உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று கேட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அனுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.
5. கட்டணம் ஏதுமின்றி சேவை புரிபவரிடம் பெரும் குறைபாடான சேவைக்கு நீதிமன்றத்திற்கு அனுக முடியுமா?
எந்த ஒரு நுகர்வோரும் தாம் பெற்ற பொருள்/சேவைக்கு ஈடாக விலையை இதனை அளிப்பவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதே நுகர்வோர் வழக்கின் அடிப்படையாகும். இலவசமாக மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு ரூபாயாவது கட்டணமாக செலுத்தி ரசீது பெற்று சேவை பெற்றிருந்தால் வழக்கு தொடுக்க முடியும்.
6. இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்?
இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.
1 குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்
2.குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்
3.இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்
4.குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்
5.பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்
6.உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்
7.அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்
7. ஈட்டுத்தொகை பெறுவதற்கு ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?
இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கு பொருந்த கூடிய அளவிற்கு ஈட்டுத்தொகை இருக்க வேண்டும்.
8. ஒரு பொருள் அல்லது சேவை பெறும்போது ஏற்படும் குறைபாட்டில் ஒரு பகுதி குறையை மட்டும் தீர்க்கும்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?
ஆம். ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குறைபாடு உடையதாயின் மற்றவை சரியாக உள்ளது என தெரியும்போது அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் சரிசெய்து தரும்படி நுகர்வோர் நீதி மன்றத்தை அனுக முடியும்.
9. இந்த வழக்கினை வழக்கறிஞர் மூலமாக மட்டும்தான் அனுக வேண்டுமா?
தேவையில்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர் நேரடியாக நீதிமன்றத்தை அனுகலாம், மிகவும் சிக்கலான நிலையில் மட்டும் வழக்கறிஞரை அனுகுவது நல்லது.
10 நுகர்வோர் வழக்கு தொடுக்கும்போது என்னென்ன காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்?
1.குறைபாடுடைய பொருள் அல்லது சேவையின் பெயர்
2.வழக்கு தொடுப்பவரின் பெயர் மற்றும் முழு விவரங்கள் அவ்வாறே எதிர்தரப்பாளரின் முழு விவரங்கள்
3.இந்த நிகழ்வுகள், எப்போது. எங்கே எவ்வாறு நிகழ்ந்தது
4.எதிர்தரப்பாளர் ஏன் இதற்கு பதிலீடு செய்ய வேண்டும்? அல்லது பொறுப்பு வகிக்க வேண்டும்? அதற்கான உத்திரவாதம் உள்ளதா? பட்டியல் உள்ளதா? விலை கொடுக்கப்பட்டுள்ளதா?
5.குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள், பட்டியல், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், உத்திரவாதம் பெற்றதற்கான ஆதாரங்கள், நேரில் அனுகி கேட்டபோது மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அல்லது எழுத்து மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி மறுத்ததற்கான ஆதாரங்கள்
6.பொருள்/சேவை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.
11. வழக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும்?
பாதிப்பு எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தினுடைய மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். மதிப்பீடு தொகை 25 இலட்சம் வரையிருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் 25 இலட்சம் முதல் 1 கோடி வரை மாநில நுகர்வோர் மன்றத்திலும் 1 கோடிக்கும் மேல் எனில் தேசிய நுகர்வோர் மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம்.
12. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து இதற்கான அனைத்து ஆவன நகல்களை இணைத்து பொருள் மதிப்பிற்கு தகுத்நவாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ. தொலைநகல் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ வழக்குகளை பதிவு செய்து இந்த வழக்கின் நகலை எதிர் தரப்பாருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
water-kudam
13. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுத்து மேல் முறையீடு எவ்வாறு செய்வது?
நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பாயின் மாநில மன்றத்திலும் மாநில மன்ற தீர்ப்பாயின் தேசிய மன்றத்திலும், தேசிய மன்ற தீர்ப்பு எனில் உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம். அப்போது அனைத்து நடைமுறைகளுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மேல் முறையீட்டிற்கு மனு செய்ய வேண்டும்.
இந்த முப்பது நாட்கள் என்ற வரம்பை நீதி மன்றம் விரும்பினால் சரியான காரணத்திற்காகவே இந்த கால தாமதம் ஆகிவிட்டது எனக்கருதி வழக்கினை ஏற்றுக்கொள்ளும்.
14. மேல் முறையீட்டின்போது நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் ஈடுகட்டும் தொகையின் மதிப்பில் 50% அல்லது ரூ.2500 எது குறைவோ அதனை மாநில மன்றத்திற்கு ரூ.35000 தேசிய மன்றத்திற்கு ரூ.5000 உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய தொகையை செலுத்த வேண்டும்.
15. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்தரப்பாளர் நடைமுறைபடுத்தவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?
எதிர்தரப்பாளர் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை என்றால் அது ஒரு குற்றச்செயலாகும். குறைந்தது ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் சிறை தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.2000 அதிக பட்சம் ரூ.10000 மட்டும் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். இடைக்கால உத்தரவு ஏதும் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுத்தாது.
இந்நிலையில் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?
இந்த உத்தரவை செயற்படுத்த நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தால் அந்த தொகைக்கான சான்றுகளை நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு நிலவரி வசூலிப்பது போன்று வசூலிக்கும்படி அனுப்பி வைக்கும்.
16. நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடு வரன்முறை யாவை?
குற்றவியல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி போன்று வழக்குகளை நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் நுகர்வோர் மன்ற நீதிபதிக்கு உள்ளது.

CITIZEN CONSUMER CLUB - THE NILGIRIS: இன்றைய குழந்தைகள் நிலை

CITIZEN CONSUMER CLUB - THE NILGIRIS: இன்றைய குழந்தைகள் நிலை: இந்திய குழந்தைகள் தினம் நவம்பர் 14 சர்வ தேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 இன்றைய குழந்தைகள் நிலை  குழந்தைகளைத் தெய்வமாகப் பார்க்கும்...

இன்றைய குழந்தைகள் நிலை

இந்திய குழந்தைகள் தினம் நவம்பர் 14
சர்வ தேச குழந்தைகள் தினம் நவம்பர் 20
இன்றைய குழந்தைகள் நிலை 

குழந்தைகளைத் தெய்வமாகப் பார்க்கும் நம் தமிழகத்தில்தான் அனாதை இல்லங்கள் அதிகமாக இருக்கின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதும் தமிழகத்தில்தான். வறுமையான குடும்பச் சூழல், குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பின்மை, கல்வி கற்க முடியாத சூழல் என பல்வேறு காரணங்களால் குழந்தைத்தொழிலாளர்கள் உருவாகின்றனர். 

பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் போராடிய நிலையிலும் இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. அரசாங்கம் பாதுகாப்புச்  சட்டம் இயற்றினாலும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்க முடிவதில்லை. 
காரணம் அவர்களுடைய வறுமை. தனக்கோ, தன் குடும்பத்திற்கோ போதிய உணவோ, வருமானமோ இல்லாத சூழலில் வேறுவழியின்றி வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் உருவாகிறது. தவிர வேறு சில காரணங்களாலும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.


தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்ல உலகளவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை  பெரிய அளவாகத்தான் இருக்கிறது. உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேரத் தொழிலாளர்களாக உள்ளதாக ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. 

பள்ளிக்குச் செல்ல முடியாமலும், சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். பெரும்பாலானோருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. குழந்தைகளாக இருக்க இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 

சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.
இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் எனத் தெரிவிக்கிறது. 


சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, உலகளவில் குழந்தைத் தொழிலாளர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா (16 கோடி குழந்தைத் தொழிலாளர்) முதலிடத்தில் உள்ளது. நிலக்கரிச் சுரங்கம், விவசாயம், தீப்பெட்டி, பட்டாசுத் தயாரிப்பு, செங்கல் சூளை, (டெக்ஸ்டைல்) துணிக்கடை, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் இவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

காரணம் இவர்கள் குறைந்த ஊதியத்தில், வார விடுமுறையின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கப்படுகின்றனர். மேலும் “சித்தாளு வேலை எட்டாளு செய்யாது” என்ற பழமொழிக்கிணங்க பெரும்பாலான சிறு, பெரு வேலைகளை இச்சிறுவர்கள் செய்வது போல் பெரியவர்கள் கூடச் செய்ய முடியாதென்பதால் இக்குழந்தைகள் அதிகம் பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சலையில் தான் அதிகளவில் குழந்தைத் தொழிளாலர்கள் உள்ளனர். அதற்கடுத்து திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். நகரங்களில் மட்டுமல்ல  கிராமங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்திருக்கின்றனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 
15 வயது வரை கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்கள் விரும்பினால் கடினமில்லாத (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).  வேலையைப் பார்க்கலாம் என வரையறுத்துள்ளது.
குழந்தைத் தொழிலாளார்களை மீட்டெடுக்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் 1960 ஆம் ஆண்டு இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது. 


குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதைத் தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது. 

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜூன் 12ம் தேதி  ‘குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு 
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  உறுதிமொழி,  
‘வீட்டு வேலைகளில், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவது’ என்பதுதான். இந்த உறுதி மொழியோடு அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கொடுக்கும் முயற்சியை இன்னும் துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தைத் தொழிலாளர் நிலை ஒழியும். அபபோது தான் உண்மையான குழந்தைகள் தினத்தை நாம் கொண்டாட முடியும் 
நன்றி சு, சிவசுப்பிரமணியம் 
தலைவர் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

அறிந்துகொள்வோம் – நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.1986:-

அறிந்துகொள்வோம் – நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.1986:-
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும்.
மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
முக்கிய விதிகள்:-
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) –இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக (FIRST CLASS MAGISTRATE COURT)செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் (Three – Tier Consumer Disputes Redressal Agencies) பண வகையிலான அதிகார வரம்பு :-
1).மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்   – அசல் அதிகார வரம்பு (Original (District Forum) 20 இலட்சம் Jurisdiction).
2).மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – 20 இலட்சத்திற்கும் மேல் ஒரு (State Commission) கோடி வரை.
3).தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஒரு கோடிக்கு மேல்.  (National Commission)
4).மேல் முறையீடு (APPEAL) :- உச்சநீதிமன்றம் (Supreme Court)
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(b)”:-
புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?
1).நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.
2).ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.
3).நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.
4.மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.
5).நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir)தாக்கல் செய்யலாம்.
6).மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நட்ட ஈடு தொகை பெறமுடியும்.
நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-
பிரிவு.2(d)(i):- பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது; (Consideration) (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது; (Deferred Payment) (அ) தள்ளி (பிறகு) பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து ‘நுகர்வோர்’ என்ற விளக்கத்திற்கு வருகிறார்.
ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை ‘மறுவிற்பனைக்கு’(For Resale) வாங்குபவரும், (அ) ’வியாபார நோக்கத்திற்கு’ (For Commercial Purpose) வாங்குபவரும், ‘நுகர்வோர்’ பிரிவில் வருவதில்லை.
பிரிவு.2.(d)(ii):-
‘சேவை (Services)’
பணம் செலுத்தி, ‘சேவையை’ வாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது) – (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும் – பணம் செலுத்தி ‘சேவை’ பெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) ’சேவைகளின்’ பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
பிரிவு.2(e):-
நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?(Consumer Dispute):-
நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்சனை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’  என்று கூறுவது அல்லது ‘உண்மை’ என்று கூறுவதாகும்.
‘நுகர்வோர்’ பிரச்சனையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல்லது ‘அசையா சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்சனைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்சனை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்சனை பற்றி தீர்மானிக்கப்படவேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).
பிரிவு.2(f):-
குறைபாடு (பொருட்கள்)’(Defect):-
‘குறைபாடு’ (Defect) என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பது’ அல்லது ‘தரத்தில்’ குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவையாக’ இல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
எடுத்துக்காட்டு:-
புகார்தாரர், தனது புகாரில், வாகனத்தில் குறைபாடு (Defect) உள்ளது என்றும், அதன் அடிப்படையில் அந்த வாகனத்தை மாற்றி, வேறு வாகனம் கொடுக்க வேண்டும் என்று கோரும்பொழுது, அந்தப் புகார்தாரர் அந்த வாகனத் ’தாயாரிப்பில் குறைப்பாடு’ (Manufacturing Defect) என்று நுகர்வோர் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
சேவை குறைபாடு:-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ‘நுகர்வோரின் நலனைப்’ பாதுகாப்புதான். அதாவது, வியாபார ரீதியாகச் சொல்லுகின்ற பொழுது, பொருட்களை வாங்குபவர் மற்றும் பெரும்பான்மையாக கருதப்படுவது, பொருட்களின் பயன்படுத்தும் ‘சேவை’(Service) என்பதாகும். ’சேவை குறை’ (Deficiency) என்பது ‘தவறான செய்கை’, ‘நேர்த்தியின்மை’, ‘சிறுகுறைபாடு’ அல்லது ‘சேவையில் பற்றாக்குறை’ மேலும் பொருட்களின் தரத்திலும் (Quality) குறைபாடு, சேவை முறையில் குறைபாடு, அந்த சேவைமுறை அமலில் உள்ள சட்டத்தினால் பின்பற்ற வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அந்தச் சேவை முறை ஒப்பந்தத்தின் தொடர்பாக அல்லது வேறு வகையிலும் செயல்படுத்த வேண்டுமென்று பொறுப்பு எடுத்துக்கொள்வது அல்லது வேறு வகையிலும் சேவைக்கு தொடர்பாக இருப்பது என்பதாகும்.
தொடர்வண்டி (Railway) சேவை குறைபாடு:-
பதிவு செய்யப்பட்ட பெட்டியில்(Compartment) பதிவு செய்துள்ள பயணிக்கு, ”தண்ணீர் வசதி” கிடைக்கவில்லை. எனவே, இத்தகைய சேவை குறைபாட்டிற்கு (Deficiency in Service) தொடர்வண்டி நிர்வாகம், பாதிக்கப்பட்ட அந்த பயணிக்கு நஷ்டஈடு பணம் வழங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.
மேற்கூறிய சேவை குறைபாடுகளை போலவே விவசாய விதைகளின் தரத்தில் குறைபாடு, விவசாயத்தில் மின் இணைப்பு வழங்குவதில் குறைபாடு, கல்வி நிறுவனங்களில் சேவை குறைபாடு, வங்கி முகவர்கள் வாகனங்கள் கைப்பற்றுவதில் குறைபாடு, வழக்கறிஞர் தொழிலில் சேவை குறைபாடு, வீடு கட்டி தருவதில் குறைபாடு, ஆயுள் காப்பிட்டில் சேவை குறைபாடு, சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் குறைபாடு, விமான சேவையில் குறைபாடு, வங்கி சேவை குறைபாடு, அஞ்சல் சேவை குறைபாடு, குரியர் சர்வீஸ் சேவையில் குறைபாடு, போன்ற பல மக்கள் நுகர்வுகின்ற சேவைகளில் குறைபாடு இருந்தால் நட்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம்.
நுகர்வோர் சட்டத்தில் நட்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-
மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது.
இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்குரைஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.