வெள்ளி, 13 நவம்பர், 2015

நுகர்வோர் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இப்போதைய நுகர்வோரிடையே இல்லை

நுகர்வோர் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இப்போதைய நுகர்வோரிடையே இல்லை என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய முன்னாள் தலைவருமான கே. சம்பத் கூறினார்.

"நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986: தீர்வுகளும் சீர்திருத்தங்களும்' என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி கே. சம்பத் பேசியது:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது இந்தியாவுக்கு புதிது அல்ல.

நுகர்வோர் பாதுகாப்பு என்பது, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது. பின்னர், பிற நாடுகளுக்கு இந்த நடைமுறை கொண்டு செல்லப்பட்டு, இப்போது மீண்டும் இந்தியாவுக்கே வந்துள்ளது.

அரசர்கள் ஆட்சி நடைபெற்ற பண்டைய இந்தியாவில், நுகர்வோர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசர் நிர்ணயிக்கும் விலையில்தான் பொருள்களை விற்பதும், வாங்குவதும் நடைபெற வேண்டும் என சட்டங்கள் இருந்துள்ளன.

பல்வேறு காரணிகளின் அடிப்படையில், பொருள்களுக்கான சந்தை விலையை பண்டைய கால அரசர்கள் நிர்ணயித்துள்ளனர். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் விலையை மீறி விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. சரக்குப் போக்குவரத்து, கட்டுமானத் தொழில் என பல்வேறு துறைகளிலும் நுகர்வோரை ஏமாற்றுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1986-ல் நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் நுகர்வோரை பாதுகாப்பதற்கான பல்வேறு சிறந்த ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இப்போதைய நுகர்வோரிடையே இல்லை.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து நுகர்வோரிடையே உள்ள விழிப்புணர்வு பற்றி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வில் தமிழகம் 17-வது இடத்தில் உள்ளது. சிறந்த கல்வித் திட்டம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளபோதும், இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வை அடித்தட்டு மக்களிடையே கொண்டு செல்ல முடியாதது கேள்விக்குறியாக உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சட்ட மாணவர்களும், சட்டக் கல்வி நிறுவனங்களும் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையேயும், பிற கல்லூரி மாணவர்களிடையேயும் ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற (சென்னை வடக்கு) தலைவர் ஆர். மோகன்தாஸ் பேசியது: மக்கள்தொகை அதிகரிப்பு, வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படாததால் பல ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 1980-ம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு 10 லட்சம் நுகர்வோருக்கு 150 நீதிபதிகள் உள்ளனர் என்பது தெரியவந்தது. ஆனால், இந்தியாவில் 10 லட்சம் நுகர்வோருக்கு வெறும் 13 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்து மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 67,764 வழக்குகளில், 59,151 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 8,613 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.


இதுபோல், இந்தியா முழுவதும் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் 1,02,934 வழக்குகளும், மாவட்ட குறைதீர் மன்றங்களில் 2,51,836 வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலை மாற நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்பதோடு, நுகர்வோருக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும் மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக