வெள்ளி, 13 நவம்பர், 2015

தரமற்ற பொருட்களை தலையில் கட்டும்

புதுடில்லி: கொடுத்த வாக்குறுதிப்படி, குடியிருப்பை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், தரமற்ற பொருட்களை தலையில் கட்டும் வியாபாரிகள் போன்றோரை, சிறையில் தள்ள, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாவை, ஏப்., 20ம் தேதி துவங்கும், பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம் தொடர்பாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங் கள் துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது, சர்வதேச தரத்திற்கு இருக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது.திருத்தம்:

அதனால், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொருட்களை வாங்குவதால், பாதிக்கப்படும் நுகர்வோர் தொடரும் வழக்குகளை, விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளை எளிமையாக்கவும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில், பெரிய அளவில் திருத்தம் செய்யப்படுகிறது. நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களை, விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நுகர்வோர் பாதுகாப்பு கமிஷன் உள்ளது. அதுபோன்ற கமிஷனை, நம் நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான விதிமுறைகள், புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன.


ஆயுள் தண்டனை:


நுகர்வோருக்கு விற்கப்படும், பொருட்களின் தரத்திற்கு அதை தயாரிக்கும் நிறுவனங்கள் பொறுப்பேற்கச் செய்யப்படும். உணவு நஞ்சானால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கவும், புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், ஒரு பொருளை வாங்கிய தால், புகார் கொடுத்தவர் மட்டுமின்றி, அவரைப் போல வேறு பலரும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த புகாரை நுகர்வோர் பாதுகாப்புக் கமிஷன் விசாரிக்க வழி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதுபோன்ற வழக்குகளில், பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனம், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என, உத்தரவிடவும், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும், நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்படும். கார் முதல் குடியிருப்பு கள் வரை, அனைத்து விதமான பொருட்களும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் கொண்டு வரப்படும். நிறுவனங்களின் சேவையில் குறைபாடுகள் இருந்தால், கொடுத்த பணத்தை நுகர்வோர் திரும்ப பெறவும், விமானச் சேவையில் பாதிக்கப்படும் பயணிகள், செலுத்திய கட்டணத் துடன் இழப்பீடு பெறவும், புதிய சட்டத்திருத்தத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது, மாவட்ட அளவில் நுகர்வோர் நீதிமன்றங்களும், மாநில அளவில், நுகர்வோர் தகராறுகள் குறைதீர் கமிஷனும் உள்ளன. இனி, அனைத்து மட்டங்களிலும், நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்படும்.

ஒப்புதலுக்கு...:


தற்போதைய, 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986'ல் தான், திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்தத் திருத்தங்கள் எல்லாம், விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். பார்லிமென்டின் முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர், இந்த வாரத்துடன் முடிவடைந்து விடுவதால், ஏப்., 20ம் தேதி துவங்கும், இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டதொடரில், நுகர்வோர் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படும். இவ்வாறு, அமைச்சர் பஸ்வான் கூறினார்.
* நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து, நுகர்வோரை பாதுகாக்கவும், நுகர்வோரின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணவுமே, 'நுகர்வோர் பாதுகாப்பு கமிஷன்' அமைக்கப்பட உள்ளது.
* 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கோரும் புகார்களை, வழக்கறிஞர்கள் இல்லாமல், நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்கவும், வழக்கு விதிமுறைகளை எளிதாக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
* நுகர்வோர் தொடரும் வழக்குகளில், அவருக்கு சாதகமாக கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால், அதை எதிர்த்து, ஒரே ஒருமுறை மட்டுமே, அப்பீல் செய்ய முடியும். அதாவது, நுகர்வோருக்கு சாதகமாக, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் போலவே, மாநில குறைதீர் கமிஷனும் தீர்ப்பு வழங்கினால், அதை எதிர்த்து, தேசிய அளவிலான நுகர்வோர் கமிஷனை அணுக முடியாது. மாறுபட்ட தீர்ப்பு வழங்கினால் மட்டுமே, தேசிய நுகர்வோர் கமிஷனை அணுக வகை செய்யப்பட்டு உள்ளது. 

* நுகர்வோர் புகார் அளித்து, 15 நாட்கள் கடந்து விட்டால், அதை நீதிமன்றங்கள் தாமாக எடுத்து விசாரிக்க வேண்டும். அதுபோல், மேல்முறையீட்டில், 30 நாட்களுக்குள் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்.
* உறுதி அளித்தபடி, வீடுகளை, நுகர்வோரிடம் ஒப்படைக்காத கட்டுமான நிறுவனங்கள், தவறான தகவல்களை தரும் விளம்பரங்களை வெளியிடு வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

* தங்கம் போல், வெள்ளி நகைகளுக்கும் தரத்திற்கான, 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக